Daily Archives: September10, 2009

வாழ்க தமிழ்! வாழ்க பார்ப்பனீயம்!

“பலவீனம் அதிசயங்களை நம்புவதில் அடைக்கலம் பெற்றுவிடுகிறது” என்றார் காரல் மார்க்ஸ்.

ஆம். மார்க்சின் கூற்று ஓர் அறிவியல் உண்மையே. இதற்கான உதாரணத்தை நாம் தமிழகத்திலேயே காண்போம். நகைசுவை நடிகர் வடிவேல் ஒரு படத்தில் காலை எழுந்ததும் தன் தாயையும், தந்தையையும் வணங்கி உலகில் அவர்களை விட சிறந்த கடவுள் யாரும் இல்லை என்கிற பயபக்தியுடனும், அளவிலா அன்புடனும் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு வேலைக்குச் செல்வார். மாலை வேலை முடிந்த பிறகு புல் மப்பை ஏற்றிக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே கடவுள்களான தன் தாயையும், தந்தையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் போட்டு அர்ச்சனை செய்து கொண்டே நுழைவார். இவருக்கு பயந்து கொண்டே அவருடைய அப்பா ஆறு மணிக்கெல்லாம் முழுக்க போர்த்திக்கொண்டு படுத்துவிடுவார்கள். திட்டிக்கொண்டே அப்பாவை எழுப்பி நல்லா சாத்து சாத்தென்று சாத்துவார். அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பந்தாடிவிட்டு கடைசியாக தான் ஏன் அவ்வாறு அடித்தேன் என்பதை அழுதுகொண்டே விளக்குவார். ஆனால் அடியும் அரவணைப்பும் அன்றோடு முடியாது. அடுத்த நாள் காலை அளவிலா அன்பும், மாலை அளவிலா அடியும் கிடைக்கும். இது தினமும் தொடரும்.

அதே போலத்தான் சில சமயங்களில் தமிழர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், மூத்தகுடிகள் என்றும் புகழ்ந்துவிட்டு பிரிதொரு சமயங்களில் தமிழர்கள் தான் உலகிலேயே அடி முட்டாள்கள், சொரணையற்றவர்கள், ஏமாளிக்கூட்டம் என்றும் தமிழ் மக்களை கண்டபடி புகழ்வதும் கண்டபடி ஏசுவதுமாக இருக்கும் ஒரு கூட்டம்  ‘தமிழ் தேசியம்’ என்கிற அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுவதற்காக அந்த சூடு, சொரணையற்ற மக்களைத் திட்டித்திட்டி திரட்டும் பகீரத முயற்சியில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. முதிர்ச்சியின் கிழட்டுத்தன்மையும் அதன் விளைவாக பலவீனமும் அடைந்துவிட்ட  ‘தமிழ்தேசியம்’ பல அதிசயங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. சாதி உணர்வுள்ள தமிழன் இன உணர்வுள்ளவனாக மாறி விடுவான் என்றும், பிரபாகரன் மார்க்சியவாதி என்று  ‘மார்க்சியவாதிகள்’ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், “பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழுவார்” என்றும் காத்துக்கொண்டிருக்கிறது. அதிசயங்கள் நிகழுமா? நிகழும் ஆனால் நிகழாது! சாதி உணர்வுள்ள தமிழனுக்கு வர்க்க உணர்வை ஊட்டலாம். ஆனால் உயிரோடிருந்தாலும் பிரபாகரனை மார்க்சியவாதியாக்க முடியாது.

இன்று தமிழ்நாட்டிலுள்ள பல வண்ணத் தமிழ் தேசிய கற்பனாவாத அரசியலின் மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சில இளைஞர்கள் கற்பனாவாத தத்துவத்திற்கேற்பவே ஈழமும், தனித் தமிழ்நாடும் தானாகவே அமைந்து விடும் என்கிற கற்பனை மயக்கத்திலிருக்கும் இந்த சூழலில், தத்துவ அடித்தளமே இல்லாத தமிழ் தேசியத்தின்  ‘வீரம்’ என்ன என்பதை இங்கு பார்ப்போம். தமிழகத்தில் பல பல வண்ணங்களில் ஆவிகளாக மட்டுமே உலா வரும் தமிழ் இனவாதிகள் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கும் புரட்சிகர அமைப்புகளான எம் மீது சில நேர்மையற்ற  அரசியலற்ற ‘விமர்சனங்களை’ வைக்கிறார்கள். தோழர் மருதையன் பார்ப்பனர், பார்ப்பனத் தலைமை, புலிகளை எதிர்ப்பவர்கள்,  தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் என்கிற சில  ‘நேர்மையான’ விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த அக்கப்போர்களுக்கு ஆயிரம் முறை பதிலளித்த பிறகும்  ‘இல்ல, இல்ல மொதல்ல இருந்து வா’ என்பது ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்த மொக்கை விமர்சனங்களுக்கு மீண்டும் ஒரு முறை ஒரு சில வரிகளில் மட்டும் பதிலளித்துவிட்டு மேலே செல்வோம்.

எங்களைப் பொறுத்தவரை தோழர் மருதையன் பார்ப்பனர் இல்லை. அவர் ஒரு கம்யூனிஸ்ட் அவ்வளவே. மற்றபடி ஒரு நபரின் சாதியை கொண்டு அவருடைய நடவடிக்கைகளை அளக்கும் கண்ணோட்டம் தான் பார்ப்பனீய கண்ணோட்டம். ஒருவரின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் எல்லாம்   பிறப்பின் அடிப்படையில் தான் அமையும் என்று பார்ப்பனீயம் தான் வரையறுத்து வைத்துள்ளது. இப்போது பார்ப்பனீயத்தின் இளைய பங்காளிகளாகி விட்ட தமிழ்பார்ப்பனியவாதிகளும் அதையே சொல்லி வருகிறார்கள்.

உங்கள் பார்வையில் தோழர் மருதையன் பார்ப்பனர் எனில், தாழ்த்தப்பட்ட மக்களின் பார்வையில் தமிழ்தேசியம் பேசும் நீங்கள் எல்லோரும் ஆதிக்க சாதி வெறியர்கள் தான்! இதை ஒத்துக்கொள்வீர்களா ?

புலிகளை ம.க.இ.க ஏன் ஆதரிக்கவில்லை என்கிறார்கள். ஏன் ஆதரிக்கவேண்டும்?  ஈழத்தின் விடுதலைக்காக நின்ற மார்க்சிய லெனினிய தோழர்களையே கொன்றொழித்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா ?

ராஜீவ் கொலையை ஆதரித்து  “ராஜீவ் ஒரு முறையல்ல நூறு முறை கொள்ளபட வேண்டியவர்” என்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்த எங்கள் மீதே அந்த கொலைப் பழியை போட்டு துரோகம் செய்யப் பார்த்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா ?

மக்களை கேடயமாக்கி கொன்றார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? அல்லது இறுதி நாட்களில் தப்பித்து ஓட நினைத்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? எதற்காக ம.க.இ.க புலியை ஆதரிக்க வேண்டும்?

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று பிரசாரம் செய்கிறார்கள். உண்மை தான், ஆனால் யாருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்? தமிழ்தேசியவாதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்களுக்குத்தான், இடஒதுக்கீட்டை கொடுக்கவே கூடாது என்று ம.க.இ.க மிக தீவிரமாகவும், வன்மையுடனும் எதிர்க்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை நாம் என்றைக்கும் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில்  ‘இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வு இல்லை’ என்றும் சொல்கிறோம். ஆனால் தமிழ் தேசிய பித்தலாட்டக்காரர்கள் ம.க.இ.க வின் இடஒதுக்கீடு பற்றிய இந்த நிலைப்பாடு தமக்கும் தமது சாதிக்கும் எதிராக இருப்பதால் அதை திரித்து, வெட்டி, சுருக்கி ம.க.இ.க இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று சொல்லி தாழ்த்தபட்ட மக்களையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

ஆனால் பாவம்! ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் தம்மை தமிழராய் எண்ணியதுமில்லை. இந்த தமிழ்தேசிய கனவான்களும் அவர்களைத் தன் உறவுகளாய் ஏற்பதுவுமில்லை. எம்மை பற்றிய இந்த அவதூறுகளுக்கு நாம் பல முறை பதிலளித்து விட்டோம். இருந்தும் பாசிச ஜெயலலிதாவிடம் கூட நேர்மையான சந்தர்ப்பவாதத்தை காணும் இந்த நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள் மீண்டும் மீண்டும் அதே அவதூறுகளை கொஞ்சமும் வெட்கமின்றி கக்கி வருவதாலேயே இதற்கு பதிலளிக்கிறோம்.

தமிழ் தேசியம் என்பதன் ஆன்மாவே பார்ப்பனியம் தான். ஒரு இனம் என்கிற வரையறையின் படி முழுமை அடையாத தமிழர்களை, சாதிப் பெருமை பாராட்டும் நிலப்பிரபுத்துவ அடையாளத்தை மகிழ்ச்சியுடன் சுமக்கும் தமிழர்களை, அவர்களின் மனம் கோணாதபடி அணி திரட்டி இவர்கள் தமிழ் தேசியம் அமைப்பார்களாம்.

தமிழனுடைய சாதிப்பற்றை ஒழிக்க விரும்பினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி தமிழனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்களா ? ஒடுக்கும் ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று சொல்கின்ற ம.க.இ.க வை எதிர்ப்பார்களா ? ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு கேட்பது மட்டுமல்ல, பார்ப்பன இந்து மதத்தை ஒழிக்காமலேயே தமிழனுடைய விடுதலையை பற்றி பேசுகிற யோக்கியர்களும் கூட இந்த தமிழினவாத கூட்டத்திலே உண்டு. மேலும் கற்பிலிருந்து பூ, பொட்டு, தாலி என்று அனைத்திலும பார்ப்பனிய பண்பாடே தமிழ் பண்பாடு. கண்ணகியின் கற்பு உயர்ந்தது, பூ,பொட்டு தமிழர்களின் அடையாளம், தாலி (சிலர் மாறுபடலாம்) தமிழ் பெண்ணின் அடையாளம் என்பது தான் இவர்களின் உயர்ந்த ‘தமிழர் பண்பாடு’.  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் பார்ப்பனியத்திற்கு முற்போக்கு என்னும் சுண்ணாம்பு அடித்தால் அது தான்  ‘தமிழ் பார்ப்பனியம்’.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசும் தமிழினவாதிகள் அனைவரும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்காக இவர்கள் ஒன்றையும் செய்தது கிடையாது. அப்படி ஏதேனும் இருந்தால் அந்த சாதனைப் பட்டியலைத் தரட்டும் பார்க்கலாம். ஆனால் சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தமிழுக்காக செய்தது ஏராளம்.

திருவையாற்றில் பார்ப்பன கூட்டம் தமிழை  ‘நீச மொழி’ என்று சொல்லி தமிழில் பாட மறுத்ததையொட்டி திருவையாறு உற்சவத்திற்குள் புகுந்து பறையிசை முழங்கி  “தமிழில் பாடு இல்லையேல் தமிழ்நாட்டை  விட்டு ஒடு” என்று பார்ப்பன கும்பலின் மொழி வெறி தீண்டாமையை தமிழகம் முழுவதும் அம்பலமாக்கியது  ம.க.இ.க. தான். இதை தமிழினவாதிகள் செய்திருக்க வேண்டியது தானே?செய்தார்களா அல்லது யாராவது தடுத்தார்கள்? ஏன் செய்யவில்லை ?

அதன் பிறகு பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து  “அனைவரும் இந்து,  இந்துவே ராமர் கோவிலை கட்ட வா”  என்று தமிழ் மக்களையும் இந்து என்று கூறி கரசேவைக்கு அழைத்த பார்ப்பன கும்பலை அம்பலமாக்கும் வகையில்  “எல்லோரும் இந்து என்றால் எங்களையும் கருவறைக்குள் விடு” என்கிற முழக்கத்துடன் சேரி மக்களையும், பெண்களையும் அணிதிரட்டிக் கொண்டு திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்தோம். தமிழகம் முழுவதும் இது விவாதத்தை கிளப்பியது. தமிழுக்காக இந்த நடவடிக்கையை செய்ய வேண்டாம் என்று தமிழினவாதிகளை தடுத்தது யார்? ஏன் செய்யவில்லை ? இதை செய்யாதது மட்டுமல்ல தமிழ் தேசப்  “பொதுவுடைமை” க் கட்சி என்கிற ஒரு தமிழ் தேசிய கட்சி, பார்ப்பன தேசியத்தின் நாயகனான இராமனை  ‘தமிழ் பழங்குடி’ என்று கூறி பெருமை கொள்கிறது. பார்ப்பன தேசியத்தின் உதவியோடு தான் தமிழ் தேசியம் அமைக்கப்போகிறார்கள் போலிருக்கிறது.

பாசிச ஜெயலலிதாவின் பண்பாட்டு ரீதியான பார்ப்பனமயமாக்கல் திட்டப்படி நாட்டார் கோவில்களில்  ‘கிடா வெட்ட்த்தடைச்சட்டம்’  கொண்டு வந்த போது எந்த தமிழ் தேசியவாதியும் மீசையை முறுக்கிக்கொண்டு, அருவாளைத் தீட்டிக்கொண்டு போய் கிடாவை கூட வெட்டவில்லையே ஏன் ? ம.க.இ.க தானே தமிழ் மக்களிடம் போய்  “சாமி பேச்சக் கேப்பியா மாமி பேச்சக் கேப்பியா” என்று கிடாவை வெட்டியது.

அதன் பிறகு பார்ப்பன கும்பல் திருச்சியில் பெரியார் சிலையை இடித்து தள்ளிய போது உடனே இராமன் உருவப்படத்தை செருப்பால் அடித்து அய்யா சிலையின் காலடியில் இழுத்து வந்து போட்டது யார் ? அதையும் நாங்கள் தானே செய்தோம். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? நாங்கள் செய்து விட்டோம் என்பதாலா ?

தில்லையில் நடராசனை விட பெரிய ஆட்டம் காட்டிய திமிர் பிடித்த தீட்சித பார்ப்பன கும்பலின் குடுமியை பிடித்து ஆட்டி பத்து ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடி தமிழுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்தவர்கள் யார் ? தமிழை சிற்றம்பல மேடையில் ஏற்றியவர்கள் யார் ? தமிழ், தமிழ் என்று மந்திரம் பாடும் நீங்களா இல்லை நாங்களா ? நீங்கள் ஏன் இதை செய்யவில்லை. சிதம்பரம் எங்கே இருக்கிறது தெரியாதா என்ன?

மேற்கண்ட நடவடிக்கைகள் சில தான். இது போன்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாத கூட்டம் செய்யவில்லை மாறாக சோசலிசம், கம்யூனிசம், சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தான் செய்துள்ளது. இதையெல்லாம் ஏன் தமிழ் தேசியவாதிகள் செய்யவில்லை இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா எனில் இருக்காது. சந்தர்ப்பவாதத்திலேயே  “நேர்மையான சந்தர்ப்பவாதம்”,  “நேர்மையற்ற சந்தர்ப்பவாதம்” என்று வகை பிரிக்கும் இவர்கள் போன்றவர்களை என்ன வகை என்றே தெரியாத சந்தர்ப்பவாதிகளிடம் இதற்கெல்லாம் பதில் இருக்காது. மாறாக அவதூறுகள் தான் இருக்கும்.

இப்படிப்பட்ட அருமை பெருமைகளையெல்லாம் கொண்ட கூட்டத்தில் ஸ்டாலின் குரு என்கிற நபர், அதாவது தமிழினவாதி தொடர்ச்சியாக எமது அமைப்புகளைப் பற்றி மேற்கண்ட ரெடிமேட் அவதூறுகளையே கக்கி வந்தார். சரி அண்ணாருடன் விவாதித்து தான் பார்க்கலாமே என்று களத்தில் குதித்தோம். ஏற்கெனவே இவருடனான விவாதத்தில் இவருடைய  ‘நேர்மை’  பற்றி நமக்கு நேர் மறையான அனுபவம் இல்லை என்பதால் விவாத பின்னூட்டங்கள் அனைத்தையும் சேமித்து வைத்தோம். அவ்வாறு நாம் எச்சரிக்கையுடன் இல்லாமலிருந்திருந்தால் அவை அடுத்தடுத்த நாட்களே காற்றில் கரைந்து காணாமல் போயிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அவருடைய தளத்தில் சென்று அவரை விவாதிக்க அழைத்திருந்தோம். வீரத்தோடு எம்மை நோக்கி ஓடோடி வந்தவர் கடைசியில் வடிவேலின் கெத்தோடு என்னமாய் ஒரு  ‘வீர நடை’ நடந்து போனார் என்பதை கீழ் உள்ள விவாதப் பின்னூட்டங்களில் காண்க.

இந்த ஸ்டாலின் குரு என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எமது தோழர் ரஞ்சித் ஸ்டாலின் ஆர்குட்டில் டவுசரை கழட்டி ஓடவிட்டார்.  “நான் தமிழ் தேசியமே பேசவில்லை தோழர்” என்கிற அளவிற்கு கேவலமாக எமது தோழரிடம் சரணடைந்து விட்டு உடனுக்குடன் தனது ஸ்கிராப்புகளை டெலிட் செய்து விட்டார். தற்போது அது பற்றி கேட்டதற்கு நான் அப்படி ஒருவருடன் விவாதிக்கவே இல்லை என்று நா கூசாமல் பொய் பேசுகிறார் இந்த தமிழினவாதி.

இருப்பினும் நாம் அதை பொருட்படுத்தாமல் இவருடன் விவாதிக்க இறங்கிய போது   “உங்கள் தோழர் அசுரன் என்னோடு விவாதிக்கத் துணிவில்லாமல் ஓடிப்போய் விட்டார்” என்றார். இவரை தப்ப விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். எனவே நாம் அதையும் பொறுத்துக்கொண்டு  “சரி அசுரனிடம் நீங்கள் கேட்டு அவர் பதிலளிக்காத (ஆனால் தோழர் அசுரன் இவருக்கு மிக விரிவாக பதிலளித்துள்ளார்) கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கிறோம். விவாதத்தை துவங்கலாமா” என்று கேட்டிருந்தோம்.

அதற்கு தப்பித்து ஓடும் எண்ணத்தோடு   “உங்களோடு விவாதத்தை தவிர்க்க விரும்பும் என்னுடைய கோழைத்தனத்தை அம்பலமாக்கி ஒரு பதிவிடும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குவதிலேயே எனக்கு விருப்பம். உங்கள் கேள்விகளையெல்லாம் உங்கள் தளத்தில் பதிவாக போடுங்கள். நான் அதற்கு எனது தளத்தில் பதிலளிக்கிறேன். இந்த முறையால் இருவருக்குமே பிரச்சினை இல்லை” என்று பதிலளித்தார்.

எனினும் நாம் விடவில்லை.  “என்ன ஸ்டாலின் குரு இப்படி சொல்லிட்டீங்க ? சரி விசயத்துக்கு வருகிறேன். வார்த்தை விளையாட்டு வேண்டாம். காமெடி பன்னி கவனத்தை திசை திருப்ப வேண்டாம். உங்களோடு விவாதிக்க வேண்டும், விவாதத்தை துவங்கலாமா” என்று கேட்டிருந்தோம்.

இதனால் முகம்வாடிய முயலை போல் இருந்தாலும் அவர் வேக வேகமாக ஒரு பதிலை நமக்கு அளித்தார்.  அதாவது  “புலிகளை இழிவு படுத்தும் மருதையனுடைய பார்ப்பனத்தலைமையை கொண்ட அதிபுத்திசாலிகளிடம் ஒரு புலி ஆதரவாளன் விவாதிக்க பயம் கொள்வதன் நியாயம் உங்களுக்கு  புரியவில்லையா பிரதர்” என்று  நழுவழுக்கான ஒரு டீசண்ட் பிட்டை போட்டார்.

எனினும் நாம் அவரை விடுவதாக இல்லை. எனவே அவருடைய கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் விவாதத்திற்குள்ளே இழுத்து விடும் வகையில் ஒரு பின்னூட்டத்தை போட்டோம். அந்த பின்ணூட்டத்தை அவர் மூன்று நாட்களாக வெளியிடவில்லை. அதன் பிறகு அதை வெளியிட்டார். பிறகு தான் வடிவேல் பாணிக்கு மாறினார்.

“ம.க.இ.க வினருக்கு எனது பிளாக்கில் அனுமதி இல்லை என்று நான் அறிவிப்பு போடாமல் இருந்தது என்னுடைய தவறு தான், அதற்காக நான் மன்னிப்பு கூட கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.விவாதிக்க பயந்து கொண்டு கோழைத்தனமாக ஓடிவிட்டான் என்று கூட சொல்லிக்கொள்ளுங்கள் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. தயவு செய்து என்னை ஆளை விட்டு விடுங்கள்” என்று ஜகா வாங்க பார்த்தார்.

ஆனால் நாம் அப்போதும் விடவில்லை. சில பின்னூட்டங்களைப் போட்டோம். ஆனால் அதன் பிறகு யோசித்ததில் “ஒரு அடிமை கிடைச்சுட்டாங்கிறதுக்காக இப்படியா. சரி வேண்டாம் விட்டுத்தொலைவோம்” என்று விட்டுவிட்டோம்.

இவரிடம் நாம்  கேட்ட கேள்விகளுக்கு பயந்தோ அல்லது பயப்படாத மாதிரி நடித்தோ அவர் பதிலளிக்க வில்லை என்றே எங்களுக்குத் தெரிகிறது.

உண்மையிலேயே தமிழ் தேசியவாதிகளுக்கு அரசியல் பார்வையும் துணிச்சலும், நேர்மையும் இருக்குமேயானால் அவ்வாறானவர்களுடன் நாம் விவாதிக்க காத்திருக்கிறோம்.

ஆனால் ஸ்டாலின்குரு போன்ற  ‘காமெடி பீஸ்’ வகையறாக்களுடன் இனி நாங்கள் விவாதிக்க விரும்பபோவதில்லை.

பின்குறிப்பு: ஸ்டாலின் குரு இப்போது மிகவும் மகிழ்வார். ஏனெனில் அவரின் விருப்பப்படியே, நாம் அவருக்கென்று ஒரு தனிப் பதிவு போடுகிறோமே. ஸ்டாலின் குரு பெரிய ஆளு சார் நீங்க….