தில்லை: தமிழுக்கு தோள் கொடுங்கள்.

atithadi

மக்களை ஒடுக்கும் போலீசையே அடிக்கும் பார்ப்பனீய வெறி

தில்லை நடராசர் கோவில் வழக்கின் இறுதிச்சுற்றில் ‘கோவிலின் மீது தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு துளியும்‌ உரிமையில்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பதினாறாம் தேதி தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. தீட்சிதர்களும், சுப்பிரமணியசாமியும், பா.ஜ.கவும், பார்ப்பன பரிவாரங்களும் அடுத்ததாக உச்சிக்குடுமி மன்றத்திற்கு செல்லப்போகிறார்களாம். தோழர் மருதையன் கூறியது போல நம்மை ஹைகோர்ட்டுக்கு அழைத்து வந்த‌ தில்லை நடராசன், நாம் வெற்றி பெற அருள் பாலித்த தில்லை நடராசன் நம்மை தில்லி கோர்ட்டுக்கும் அழைத்துச் சென்று வெற்றி பெற வைக்க விரும்பியிருக்கக்கூடும். அய்யனின் ஆணைப்படியே தான் முன்னரும் நடந்தது இப்போதும் நடக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் ம் நாள் அரங்கேறிய காட்சிகளை யாரும்‌ அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறோம். ஆம், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அன்று தமிழகத்தில் நடந்தேறியது. அதை இந்த உலகமே கண்டது. பார்ப்பனர்களை பற்றியும், பார்ப்பன இந்து மதவெறி பற்றியும் பேசும் போது, படித்த மேதைகள் சிலர் “தீண்டாமை அப்படிங்கிறதெல்லாம் அப்பங்க. இப்பல்லாம் எல்லாரும் படிச்சிருக்காங்க. பாவம் பிராமணர்கள். சும்மா பார்ப்பான் பார்ப்பான்னு ஏன் பேசுறீங்க” என்று பார்ப்பானுக்கும், பார்ப்பனியத்திற்கும் சார்பான‌ தன்னுடைய பார்வையையே மொத்த சமூகத்தின் பார்வையாக முன்வைக்கும் ‘மென்மை’ பேர்வழிகளின் முகத்தில் சப்பென்று சாணியை பூசிய திருநாள் அது. மென்மை என்கிற‌ இருட்டால் மறைக்கப்பட்ட‌ இந்துமதத்தின் பயங்கரவாதத்தை, மதவெறியை, பார்ப்பனீய வெறித்தனத்தை பார்ப்பன பாசிசத்துக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பேர்வழிகளுக்கு பட்டவர்த்தனமாய் காட்டிய நாள் அது.

ஆம். 2008 மார்ச் 2ஆம் நாள் தமிழில் பாடலாம் என்கிற‌ உச்சநீதிமன்ற ஆணையை பெற்றுக்கொண்டு சிவனடியார் ஆறுமுகசாமி், சிதம்பரம் நடராசர் கோவிலின் சிற்றம்பல மேடையில் திருவாசகம் பாடச் சென்றார். தமிழில் பாடலாம் என்று வழக்கில் வெற்றி பெற்ற அன்றே மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர் ராஜுவின் தலைமையில், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்பு தோழர்கள் புடைசூழ ஆறுமுகசாமியை யானை மீது அமர வைத்து முரசு கொட்ட, எதை தன் வாழ்நாள் லட்சியமாக சிவனடியார் எண்ணினாரோ, எந்த மொழி தீட்டு என்று ஒதுக்கப்பட்டதோ அந்த மொழியிலேயே திருவாசகத்தை பாட தில்லை நடராசர் கோயிலுக்குள் மக்களுடன் சேர்ந்து ஆறுமுகசாமியுடன் நாமும் நுழைந்தோம். தீட்சித பார்ப்பனகும்பல் நம்மை கோவிலுக்குள் விட‌ மறுத்து ஆட்டம் போட்டது.

thiitsithar

சிற்றம்பல வாயிலை அடைத்து நிற்கும் தீட்சிதர்கள்

அன்று நந்தனை சூழ்ச்சி செய்து தீயில் தள்ளி கொன்றுவிட்டு ஜோதியில் கலந்துவிட்டார் என்று கதையளந்த தீட்சித கூட்டம், அந்த நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை ‘தீட்டு’ என்று கூறி இன்றும் மூடியே வைத்துள்ளது. இன்றோ, விட்டிருந்தால் சிவனடியார் ஆறுமுகசாமியையும் சோதியில் அல்ல சுவற்றிலேயே புதைத்து “அவர் இறைவன் திருகோவிலின் சித்திரமாக மாறிவிட்டார்” என்று கதையும் கட்டி விட்டிருப்பார்கள். ஆனால் அய்யா ஆறுமுகசாமி தன் வாழ்வில் 30 ஆண்டுகளாக தமிழில் பாடக்கூடாது என்கிற தீட்சித கும்பலின் மொழித் தீண்டாமையை எதிர்த்து போராடி வருபவர். நந்தன் உள்ளே நுழைந்ததும் தீயால் சூழப்பட்டு கருகியவர். சிவனிடியார் 30 ஆண்டுகாலமாக மொழி தீண்டாமையில் கருகியவர். கருகினாலும் தன் கருத்தை மாற்றிகொள்ளாமல் மொழி தீண்டாமைக்கெதிராக‌ போராடி வரும் போராளி அவர்.

கோவிலுக்குள் நுழைந்த மாத்திரத்திலேயே அதிர்ச்சியும் தீட்சிதர்களின் ‘நான் கடவுள்’அகோரி அவதாரமும் நமக்கு காத்திருந்தது. சிற்றம்பல மேடையை சுற்றியும் தீட்சிதர்கள் உடம்பு முழுவதும் நெய்யை பூசிக்கொண்டு, சிவனடியார் ஆறுமுகசாமியை உள்ளே நுழைய‌ விடாமல் தமது கொடுக்குகளால் கொட்டி வீழ்த்துவத‌ற்காக தேனிக்களாய் குழுமியிருந்தார்கள். மக்களும் தோழர்களும் உள்ளே நுழைய‌ அனுமதி மறுக்கபட்ட நிலையில் அவர்களை வேடிக்கை பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் போலீசாரிடம் போராடி அனுமதி பெற்று சிற்றம்பல மேடையருகே அவர்களை வர‌வைத்தார் தோழர் ராஜீ. சிற்றம்பல மேடையின் வாயிலை தமது வெள்ளை சதைப்பிண்டங்காளால் அப்பி அடைத்துக்கொண்டு வழி விட மறுத்தார்கள் தீட்சிதர்கள். சில தீட்சிதர்கள் நடக்கும் சம்பவத்துக்கும் தமக்கும் எந்த‌ சம்பந்தமுமே இல்லை என்பதை போல‌ சிற்றம்பல மேடையின் வாயிலை ஒட்டிய‌ இரண்டு சுவர்களின் ஓரங்களிளும் பதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தூண்களிலும் தொங்கிக்கொண்டு நடப்பதை விசித்திரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். காவல் துறை உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்ட பிற‌கும் தீட்சிதர்கள் வழி விடுவதாய் இல்லை. குடுமிகளை முடிந்து கொண்டு ஆவேச ஆட்டம் போட்டார்கள். காவலர்களையே தாக்கினார்கள், ஒரு கட்டத்தில் காவல் துறை உயர் அதிகாரியையே தாக்கினார்கள். அதன் பிறகு தான் காவலர்களுக்கே கொஞ்சம் சொரணை வந்தது, பிற‌கு கடுப்பாகி, பிடிக்கு நழுவிய தீட்சிதர்களின் குடுமியை பிடித்து குண்டுக்கட்டாக வெளியில் தூக்கிப்போட்டார்கள்.

thillai-copy

தில்லையில் சூழ் கொண்டுள்ள‌ பார்ப்பன பயங்கரவாதம்

தோழர் ராஜுவின் வழிநடத்துதலில் மக்களும் தோழர்களும் ஆரவாரம் மட்டுமே செய்து அந்த வரலாற்று நிகழ்வை கண்டு கொண்டிருந்தனர். சிற்றம்பல மேடையின் நுழைவாயிலை சுற்றி நின்றிருந்த தீட்சிதர்களை காவலர்கள் அப்புறப்படுத்தினாலும் கருவறைக்குள் இருந்தவர்களை வெளியேற்ற‌ இயலவில்லை.ஆறுமுகசாமி போலீசு பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தார். ஆனால் கசங்கிய காகிதம் போல் வெளியே வந்தார். அவரை சிற்றம்பல மேடையின் இருளுக்குள் வைத்து தீட்சிதர்கள் அடித்திருக்கிறார்கள். தன் கண்ணாடி உடைபட்ட நிலையில் அவர் தாக்கபட்டுள்ளார் என்பதை அவரே காவல் துறையினரிடம் கூறினார். சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக் கோரி தோழர்கள் கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். ஆனால் காவல் துறை என்பது அவாளின் ஏவள் துறை தானே, அதனால் வழக்கம் போல் தோழர்கள் மீதே ஒடுக்குமுறையை ஏவியது.

பிற‌கு கோவிலை அரசே கையகப்படுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த கோவிலில் தீட்சிதர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தீட்சிதர்களின் பல்வேறு நிதி மோசடிகளை பற்றியும், முறைகேடுகளை பற்றியும் நாம் தொடுத்த‌ வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. பிப்ரவரி 2,2009 தமிழகத்தின் வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டது.இந்த தீர்ப்பை நீதிபதி பானுமதி அவர்கள் வழங்கினார்கள்.இந்த வழக்கில் நாம் வெற்றி பெற்றோம். உடனடியாக அன்று இரவே அரசு கோவிலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அரசு அதிகாரிகளை பணியில் அமர்த்தியது.

உடனே கொதித்து போன பார்ப்பன தீட்சித‌ கும்பல், பார்ப்பன ஜெயலலிதாவை போய் பார்த்தது. அரசியல் மாமா சு.சாமியை போய் பார்த்தது. பிற‌கு இந்த தீர்ப்பை எதிர்த்து, இதை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இவ்வழக்கு முடியும் வரை அரசு அதிகாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்க கோரியும் தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் தில்லை கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம் .ஏனெனில் அது தமது மூதாதையர்களால் கட்டப்பட்டது. அதை நிர்வகிக்க பொது தீட்சிதர்களுக்கே உரிமை உண்டு என்றும், செயல் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டால் அது வரலாற்று சிறப்புமிக்க அந்த கோவிலை பாதுகாப்பதிலிருந்து நீதிமன்றம் தவறுவதாகவும், இதனால் இந்து மத பாரம்பரியமிக்க அக்கோயில் சீரழிய நேரிடும் என்றும்,அதனால் அரசியல் சட்டம் 26ம் பிரிவின் கீழ் தமக்கு பாதுகாப்பு தரவும் கோரியிருந்தார்கள். (இவ்வழக்கில் தன்னையும் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சேர்க்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த இந்து மதவெறியன் சு.சாமி யின் மொட்டைத்தலையில் ஆம்ப்லேட் போட்டது தனிக்கதை, அதை இந்த லிங்கில் படிக்கவும்) இவ்வாறான தீட்சிதர்களின் பூச்சாண்டி கதைகளை விசாரித்த நீதிபதி கே.வி.ராஜபாண்டியன், டி.ராஜா ஆகியோர் 15-09-09 அன்று பரபரப்பான தீர்ப்பளித்தனர். வரலாற்று ரீதியிலான ஆவணங்களை வைத்து பார்க்கும் போது இக்கோவில் 10முதல் 13ம் நூற்றாண்டுகளில் சோழர், பாண்டியர் விஜய நகர பேரரசர்களால் கட்டப்பட்டது, எனவே சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என்றும், இதை பராமரிக்க அரசு தரப்பில் அதிகாரி நியமிக்க நீதிபதி ஆர்.பானுமதி அளித்த தீர்ப்பு உறுதியானது என்றும் தீர்ப்பளித்தார்கள்.

மேலும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் சில விடயங்களும் வெளியே வந்தன. கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை கண்டறியவும், கட்டளைகளை கண்டறியவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 400 ஏக்கர் விலைநிலங்கள், காணிக்கைகள், தங்க நகைகள், உண்டியல் வசூல் போன்ற நிதிகளுக்கு எந்த கணக்கையும் இதுவரை பராமரித்ததில்லை. எனவே நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பு சரியானது அந்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிரது என்று தமது இறுதி தீர்ப்பை எழுதினார்கள்.

பாசிச‌ ஜெயலலிதாவின் பார்ப்பன‌ பாசம்

பாசிச‌ ஜெயலலிதாவின் பார்ப்பன‌ பாசம்

நண்பர்களே,            பல ஆண்டுகளாக உழைக்காமல் கிடைத்த பணத்தில் கொழுத்த கொம்பர்கள் ஆண்டாண்டு காலமாய் தமிழை நீச பாசை என்றும் கருவறைக்குள் தமிழில் பாட கூடாதென்றும் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான போராட்டத்தில் நாம் வென்றோம்.தீட்சித பார்ப்பன கும்பலின் திமிரை அடக்கினோம்.தீட்சித திமிரை அடக்கி தமிழை அரியனை ஏற்றினோம். முறைகேடுகளை அம்பலமாக்கினோம், கோவிலை அரசு கைகளில் ஒப்படைத்தோம். இத‌னால் தோற்றுப் போன தீட்சித கும்பல் இப்போது வெறி பிடித்து போயிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் உச்சி குடுமி அவிழ்ந்துபோன தீட்சிதர்கள் டெல்லியிலுள்ள தமது உச்சிகுடுமி மன்றத்தி்ல் தமது குடுமியை முடிந்து கொண்டு வழக்கு தொடர்ந்து நியாயம் கேட்கப்போகிறார்களாம். அவர்களுக்கு என்ன! சு.சாமி போன்ற பல சாமிகளும், ஜெயலலிதா போன்ற மாமிகளும் தானாகவே உதவ முன்வருவார்கள். என்.ஆர்.ஐ பணம் கொட்டுகிறது. இந்த வழக்கை தூக்கிக்கொண்டு உச்ச நீதி மன்றத்திற்கு மட்டுமல்ல உலக நீதிமன்றத்திற்கு கூட ஓடுவார்கள். ஆனால் நமக்கு? நாம் மக்களை நம்பியே உள்ளோம். நாம் தீட்சிதர்களுக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதிலேயே பெரும் தொகை செலவிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் சென்று தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காட நமக்கு நிதி பற்றாகுறையாக உள்ளது. தமிழே உயிர் என்று மொழி பெருமை பேசும் தமிழறிஞர்களும், சிவனே உயர்ந்தவன் என்று சிவனை வழிபடும் பக்த ஆதினங்களும் தீட்சிதர்களின் தமிழ் மொழி புறக்கணிப்பு பற்றி எந்தவித போராட்டங்களும் நடத்தவில்லை. ஆகவே நண்பர்களாகிய நீங்கள் தான், தமிழ் மொழியின் உரிமையை மீட்டெடுக்கவும், மொழி தீண்டாமையை தீயிட்டு கொளுத்தவும், அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடலாம் என்னும் சமநீதியை நிலைநாட்டவும், நாம் இதுகாறும் பார்ப்பனியத்தால் எழுதபட்டு கடைபிடிக்கப்பட்ட வரலாற்றை மாற்றி எழுதவும், தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காட நமக்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

கோவில் என்பது மக்களுக்கானதே! ஆனால் மக்களை ஏய்த்து கொழுத்து தின்ற கூட்டம் இன்று மக்களின் தாய்மொழியாம் தமிழ் மொழியில் அவர்கள் பாட அனுமதி மறுக்கிறது. ஆனால் நாம் கோவிலை மக்களுடையதாக போராடி மாற்றியுள்ளோம். அவர்களின் கொட்டத்தை அடக்கியுள்ளோம்.‌ இந்த வழக்கில் நாம் தோற்றால் அவர்களின் கைகளுக்கு மீண்டும் கோவில் போய் விடும். கோவில் போவது மட்டுமல்ல, பிறகு தமிழுக்கு மீண்டும் அவமறியாதை ஏற்படும். பார்ப்பனீயத்துடன் நாம் தோல்வியடைந்தவர்களாவோம். பார்ப்பனீயத்துடன் தமிழ் தோல்வியடைந்ததாகும். அதை நாம் நடக்க விடமாடோம். பார்ப்பனீயத்திற்கெதிராக ஒன்றினைவோம்.நமது கரங்களை இனைப்போம். பார்ப்பனீயத்தை வெல்வோம். அன்‌று நந்தன் கொல்லப்பட்டான். அவனுக்கு போராட thillai1அன்று யாருமில்லை. ஆனால் இன்று சிவனடியார் ஆறுமுகசாமிக்காக நாம் இருக்கிறோம். இது நம்முடைய‌ போராட்டம்! நம் அனைவருக்குமான போராட்டம்!! ஆதரவு தாரீர்! உங்களால் இயன்ற அனைத்து உத‌விகளையும் இந்த போராட்டத்திற்கு வழங்குங்கள். இந்த போராட்டத்தை வெற்றி பெறச்செய்யுங்கள்.

போராட்டத்திற்கு ஆதரவ‌ளிக்க‌ கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

தோழர் ராஜீ -9443260164
தோழர் சுரேக்ஷ்-9884455494

தொடர்புடைய பதிவுகள்,காணொளிகள்,உரைகள்.

இது நம்முடைய போராட்டம், இதைத் தாங்கிப்பிடியுங்கள்.

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

தமிழில் பாடியதால் சிதம்பரத்தில் நடராசர் பெருமான்வெளியேறினார்..?(வீடியோ)

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் :வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!

தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்.

தில்லை நடராசரின் ஆலயம்:தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்!– பாகம் 1 தோழர் மருதையன்

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்!– பாகம் 2
தோழர் மருதையன்

One response to “தில்லை: தமிழுக்கு தோள் கொடுங்கள்.

  1. நல்ல பதிவு தில்லியிலும் வெல்ல தில்லை நாதன் துணை புரிவான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s