Tag Archives: இனவெறி

கிரீன் ஹன்ட்டுக்கு எதிரான பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்.அனைவரும் வருக.

காடு மலைகளின் அடிமடி ஆழத்தில்,
தங்கம்-வைரம்-பாக்சைட்-
செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு
நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு
கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் !
எல்லா வளமும்

அள்ளி எடுக்குது
டாட்டா, பிர்லா, மிட்டல், ஜிண்டால்
தரகு முதலாளிக் கும்பல்களும்
போஸ்கோ, லபார்க், வேதாந்தா
அன்னிய முதலாளிகளும் !

ஒரு டன் இரும்பு
உலகச் சந்தையில் 10,000 ரூபாய் !
முதலாளிகளுக்கு
அரசு விற்பதோ 27 ரூபாய் !


சின்னஞ் சிறிய ஜார்கண்ட் மாநிலம்
உலகச் சந்தையில் ஏலம் போகுது !
பத்து, நூறு, ஆயிரம் அல்ல,
லட்சம் ஏக்கர் பறிபோகுது !
கார்ப்பரேட் கம்பெனிகள் கொத்தி எடுக்குது !


இந்தியாவின் மானம் காக்க மண் காக்க
போராடும் உழைக்கும் மக்களை,
நக்சல்பாரி புரட்சியாளர்களை
அடக்கி ஒடுக்கவே ‘காட்டுவேட்டை’ !

பழங்குடிக்கெதிராய் ‘காட்டுவேட்டை’
மீனவர்க்கெதிராய் ‘காட்டுவேட்டை’
வேட்டைகள் தொடர அனுமதியோம் !

கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !
பன்னாட்டு கம்பெனிகள்,
தரகு முதலாளிகளுடன் போடப்பட்டுள்ள
தேசத்துரோக ஒப்பந்தங்களை
கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !

உண்மை என்ன, உண்மை என்ன ?
மண்ணைப்பறிக்கும்
மறுகாலனியத்திற்கு எதிராய்
மாபெரும் போரை மக்கள் நடத்துகிறார்கள் !

மக்களை அடக்கி ஒடுக்கி
மண்ணை விற்குது இந்திய அரசு !
இதுவே ரகசியம் ! இதுவே ரகசியம் !
‘சிதம்பர’ ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் !

ஒரு லட்சம் இராணுவத்தை
சட்டீஸ்கர்-ஒரிசா-ஜார்கண்டிலும்
தண்டகாரண்யா காடுகளிலும் குவித்து வைத்து
இந்த மண்ணின் பூர்வக் குடிகள் மீதே
இந்திய அரசு போரை நடத்துது !

பழங்குடிகளுக்குத் துணை நிற்போம் !
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில்
நக்சல்பாரிகள் தலைமையில்
அணிவகுப்போம் ! அணிவகுப்போம் !

பகத்சிங் பெயரால், திப்புவின் பெயரால்
மீண்டும் ஒரு சுதந்திரப் போரை
உடனே தொடங்குவோம் ! உடனே தொடங்குவோம் !

நேற்று வரை ‘சல்வாஜீடும்’
இன்று முதல் ‘காட்டுவேட்டை’
700 கிராமங்கள் எரிப்பு,
3 லட்சம் பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு,
50,000 மக்கள் முகாம் சிறைகளில்.

இனியும் பொறுக்கப் போகிறோ‌மா ?
சும்மா இருக்கப் போகிறோ‌மா ?


மாபெரும் பொதுக்கூட்டம் அனைவரும்

அணிதிரண்டு வாருங்கள்.



தொடர்புடைய இடுகைகள் :

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.அனைவரும் வாருங்கள்

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

இன்றைய சூழலில் உங்களால் நடுநிலை வகிக்க முடியுமா ? அருந்ததிராய் எழுப்பும் கேள்வி!

இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!

ஆப்ரேஷன் கிரீன் ஹன்ட்டை அம்பலமாக்கும் கருத்தரங்கம்‍ சென்னையில்.

ஈழம்: ஜகத் கஸ்பாரின் கப்ஸாத் தனம் அம்பலம்!

ஈழ படுகொலைகளுக்கெதிராக தமிழகத்தில் கள்ள மௌனம் காத்த யோக்கியவான்களின் நிலையை நியாயப்படுத்தி அவர்களின் மௌனத்திற்கு வலி எனும் முலாம் பூசி ‘ஈழம் – மௌனத்தின் வலி’ என்னும் கவிதை நூல் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. நாமும் வினவு இணையதளமும் மற்றும் சில இணையதளங்களும் இந்த கவிதை நூலை வெளியிட்டவர்களை பற்றியும், அதன் பின்னணியில் உள்ள உளவாளிகளையும், அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் ஈழப்போராட்டங்களை கைப்பற்றி நிறுவனமயமாக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்கள் என்பதையும் அடையாளம் காட்டினோம்.

இதில் குறிப்பாக ஜகத் கஸ்பார் எனும் பாதிரியார் (ஈழ போராட்டம் பற்றிய பேச்சில் தற்போதைய Talk Of The City) பற்றி அடையாளம் காட்டியிருந்தோம். அவரின் உளவாளித் தனத்தையும், இந்தியாவிற்கெதிராக குரலெழுப்பாமலேயே ஒடுக்குமுறை பற்றி பாதிரியார் பாணியில் ஈழப் பிரச்சனையில் பிரச்சாரம் செய்ததையும் எழுதியிருந்தோம். இந்த உளவு கும்பல் ம.க.இ.க‌ தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதையை வெட்டி சிதைத்து பிரசுரித்ததையும் சுட்டிக்காட்டி, இந்தியா மீதான இந்த கூலி கும்பலின்  விசுவாசத்தையும் அடையாளம் காட்டியிருந்தோம்.

இப்பிரச்சனை இணையத்திலும், பத்திரிகை உலகிலும், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் கடந்த வாரம் வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. கஸ்பார், எழிலன், ஞானவேல் உள்ளிட்ட‌ இவர்கள் இந்திய ஆளும் கும்பலின் ஏஜென்டுகள், இவர்களுக்கு ஈழம் தொடர்பாக சில புரொஜக்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்கிற‌ நமது குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் தரப்பிலிருந்து யாரும் இதுவரை மறுப்பு ஏதும் கூறவில்லை.

இப்போது இந்த ஜகத் கஸ்பார் நமது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அம்மனமாக அம்பலப்பட்டு நிற்கிறார். அதற்கு இன்னொரு சான்று தான், இந்த வாரம் குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் ‘புலிகள் செய்த தவறு என்ன?’ – என்கிற‌ ஜகத் கஸ்பாரின் பேட்டி.

பேட்டியில் நிருபர் கேட்ட சில கேள்விகளுக்கு பாதிரி கப்ஸார் அளித்துள்ள பதில்களில் உள்ள நயவஞ்சகமான கபடத்த‌னத்திற்கு சான்றுகளாக அவற்றிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

“உங்களுக்கு விடுதலை புலிகளுடன் நேரடி தொடர்பு உண்டா, இல்லையா?” என்று ஒரு கேள்வி. அதற்கு நம்ம பாதிரி கப்ஸார், “நான் இயக்க உறுப்பினரும் இல்லை, இயக்கத்தோடு நேரடியான தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. என்னை பொருத்த வரையில் ஒரு யதார்த்தத்தை கண்டேன். அதற்கு பதில் சொன்னேன். அது செயலாக வெளிப்பட்டது. பலரோடு தொடர்பு கொண்டேன். அவர்கள் யார் என்று கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே இயக்கத்துக்கு நான் ஆலோசகரும் அல்ல, பணியாளரும் அல்ல” என்று பதிலளித்துள்ளார்.

பாதிரியாரே உங்களை புலிகளுடன் நேரடி தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று கேட்டதற்கு, யதார்தத்தை கண்டேன். பதார்தத்தை கண்டேன் என்று பிரசங்கம் செய்யாதீர்கள். எல்லோரும் யதார்தத்தை தான் காண முடியுமே தவிர அதையும் மீறி இல்லாததை பார்க்க யாருக்கும் இங்கே ஞானக் கண்கள் ஒன்றும் இல்லை!

தோழர்களே, இப்போது புலிகளுடன் எனக்கு எந்த‌ நேரடி தொடர்புமே இல்லை. அய்யய்யோ! என்னை விட்ருங்க என்கிற பாணியில் பேசும் இந்த‌ பாதிரி தான் கடந்த ஆறு மாதங்களாக நக்கீரனில் ‘மறக்க முடியுமா’ என்கிற பெயரில் “பிரபாகரனை சந்தித்தேன் , பொட்டு அம்மாணை சந்தித்தேன், இயக்கத்துடன் நல்ல தொடர்பு இருந்தது” என்றெல்லாம் எழுதி வருகிறார். இதன் உச்சமாக  “நடேசனுடன் தொடர்பு கொண்டு இதோ இதே போனில் தான் பேசினேன்” என்று கூறினார்.

ஒரு பக்கம் புலிகளோடு தனக்கு தொடர்பு எதுவும் இல்லையென்று சொல்கிறார். இன்னொரு பக்கம் தொடர்பிலிருந்தேன் என்று கதை கதையாக எழுதுகிறார்.

யாருப்பா நீ ஜகத்து! என்று தலையை பிய்த்து கொள்வதற்கு முன் இன்னொரு விச‌யத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இவர் புலி ஆதரவாளர் இல்லை! ஆனால் இந்தியாவின் கைகூலியா? என்று யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை சட்டென விளங்கும்.

இதே குமுதம் ரிப்போர்ட்டரில் கேட்ட இன்னொரு கேள்வி “இறுதிகட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த என்னென்ன நிபந்தனைகள் வைக்கப்பட்டன?”

இதற்கு கப்ஸார் என்கிற கஸ்பார் “இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு தான் எதையும் பேச முடியும்” என்கிறார்.

இந்தியாவிற்கும் புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சம்பந்தபட்டவர்களின் ஒப்புதல் என்கிறீர்களே யார் அந்த சம்பந்தப்பட்ட்டவர்கள்?

ஜகத் கஸ்பரே, நீங்கள் என்ன ஒபாமாவின் ஒப்புதலையா கேட்கப்போகிறீர்கள்?   வெளிப்படையாக சொல்லுங்கள்  “என்னை அனுப்பிய இந்திய உளவு நிறுவனங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்” என்று.  இப்போது தோழர்களுக்கு தெரியும் என்று நம்புகிறோம். இவர் புலி ஆதரவாளரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இவர் இந்தியாவின் ஆதரவாளர், கைக்கூலி என்பது மட்டும் முழு உண்மை.

புலிகளுக்கு சேரவேண்டிய பெரும்தொகையை கஸ்பார் இடையில் கையாடல்  செய்து தனது பரிசுத்த ஆவிக்குரிய‌ கைவரிசையை காட்டிவிட்டார். எனவே புலிகள் இவர் மீது கடுப்பிலிருந்ததாக கூறப்படுகிறது. நிருபர் இது தொடர்பாக,  “ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்லும் உங்கள் மீது புலிகள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். பெரும் தொகையை கையாடல் செய்துவிட்டதாக‌ உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே” அது பற்றி உங்கள் பதில் என்ன‌ என்று கேட்டதற்கு,

கோபமாக நான் களை பிடுங்கினேன். நாத்து நட்டேன், வயலுக்கு ஏற்றம் இறைத்தேன் என்றெல்லாம் வசங்கள் பேசிவிட்டு “எனக்கு சான்றிதல் தரக்கூடிய தகுதி அதிர்வு, வினவு போன்ற‌ இணையதளங்களுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றும் பதிலளித்துள்ளார்.

உளவு பாதிரியாரே உங்களுக்கு சான்றிதழ் தர யாருக்குத் தகுதி இருக்கிறது என்று கேட்கவில்லை.

நீ சுருட்டினியா இல்லையான்னு கேட்டாக்கா என்னென்னமோ பேசிட்டு எங்கள் இணைய தளங்களுக்கு தகுதியில்லைன்னு ரிப்போர்ட் கொடுக்குறீங்க. அதுவும் சரிதான், தகுதியுள்ள ‘சன் டிவி, கலைஞர் டிவி’ போன்ற சுருட்டல் குடும்பம் சொன்னாதான் நீங்க ஒத்துக்குவீங்க. அப்படித்தானே!

இந்த பேட்டியில் உச்சபட்ச காமெடியையும் நம் பாதிரியார் செய்திருக்கிறார். அதாவது  “தோழர் துரை சண்முகத்தின் கவிதையில் இந்திய அரசுக்கெதிரான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதே” என்கிற நிருபரின் கேள்விக்கு  “நான் அவரிடம் கவிதை கேட்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. இதை முன்னெடுத்ததுச் செய்தவர்கள், ‘போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு’. கவிதை புத்தகம் அச்சிட்டு அதை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை மட்டும் தான் நான் செய்தேன். கவிதைகளை வாங்கியது அதை வடிவமைப்பு செய்தது, இது இப்படி தான் இருக்கவேண்டும் என்று எதிலும் நான் தலையிடவில்லை” என்று தலையை ஆமையை போல் பாதுகாப்பாக உள்ளே இழுத்துக் கொண்டு பதிலை மட்டும் துப்பி விட்டார் ஈழ மக்களை பாதுகாக்க குரல் கொடுக்கும் பாதிரியார்.

இந்த நூலை வெளிட்டது நல்லேர் பதிப்பகம். இந்த பதிப்பகம் இந்த ஜெகத் கஸ்பாருடையது தான். எனவே இந்த விசயம் தெரிந்திருந்த‌ பேட்டி எடுத்த பத்திரிகையாளரும் உன்னை விட்டேனா பார் என்பதைப் போல, அது உங்கள் பதிப்பகம் என்றால் ஒரு பதிப்பாளர் என்கிற முறையில் உங்களுக்கும் பொறுப்பு உண்டு தானே, நீங்களும் தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கிடுக்கிபிடி போட்டதும், அதற்கு அவர் நாங்கள் அடித்தல், திருத்தல் வேலைகளை எல்லாம் செய்வதில்லை என்கிறார்! அடித்தல் திருத்தல், சரி பார்த்தல் எதையும் இவர் செய்வதில்லையாம். ஆனால் பதிப்பிப்பது மட்டும் இவர்களாம்.  இந்தியாவை பற்றி நாங்கள் ஒரு புத்தகம் தருகிறோம் அதையும் அப்படி போடுவீரா கஸ்பாரே?

இதை கேட்கும் போது, மாப்புள நான் தான். ஆனா போட்டுட்டிருக்கிற ட்ரெஸ் என்னோடதில்ல என்பது போல்  ‘படு சுட்டியாக காமெடி கூட செய்வாரா நம்ம பாதிரி ஜகத் கஸ்பார்’ என்ற ஆச்சரியத்தை நமக்கு தருகிறது.

அடுத்து, இது போன்ற கவிதை நூல்களை வெளியிடுவதால் யாருக்கு என்ன பயன்? என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு சடாரென்று நிருபரைப்பார்த்து, நீங்கள் என்னிடம் இப்படி கேள்வி கேட்டு வெளியிடுவதால் மட்டும் யாருக்கு என்ன பயன் என்று எதிர் கேள்வி கேட்டுவிட்டு,  எங்களைப் பற்றி குற்றம் பேசும் புரட்சிக்காரர்கள் ஈழத்திற்காக இதுவரை என்ன செய்து கிழித்துவிட்டார்கள். இதுவரை இப்படி ஒரு புத்தகமாவது போட்டிருக்கிறார்களா என்று சிங்கத்தை போல சினந்துவிட்டார்.

அன்பார்ந்த இளைஞர்களே!
இது போன்ற சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நாடகமாடும் கயவர்களையும் உளவாளிகளையும் ஆளும் வர்க்க கைகூலிகளையும் நாம் அடையாளம் காணவேண்டும் என்பதற்காகத் தான் சென்ற பதிவை எழுதியிருந்தோம்.

அதில் குறிப்பாக

“இப்போது இவர்கள் மீது விமர்சனம் வந்து விட்டது என்பதால் இவர்கள் அடுத்த சில நக்கீரன் இதழ்களில் இந்தியாவிற்கு எதிராகக் கூட எழுதலாம். சில கூட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக கூட பேசலாம். அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி விடாதீர்கள். நம்பகத்தன்மை ஏற்படுத்த‌ இடைக்காலமாக‌ அப்படி பேச இது போன்ற ஆட்களை இந்திய அரசே அனுமதிக்கும். நம்பாதீர்கள்!  எச்சரிக்கை!” என்று முன் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

அதற்கேற்றாற்போலவே இந்த பேட்டியில் “இந்தியா இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது உண்மை, போர்க் குற்றங்களில் இந்தியாவுக்கும் மறைமுக பங்கு இருக்கிறது. இந்திய மக்களின் கரங்களில் ஈழ மக்களின் இரத்தம் படிந்திருக்கிறது. இந்தியாவுக்கு பரிசுத்த பட்டம் தர யாரும் தயாராக இல்லை” என்று ஜனநாயகவாதி போல‌ சொல்லியிருக்கிறார்.

இந்த‌ ஜகத் கஸ்பருக்கு நாம் சில‌ கேள்விகளை மட்டும் முன் வைக்கிறோம்:

1. போரை துணை நின்று நடத்தி கொடுக்கும் பரிசுத்தமற்றவனின் ஏவலாளாக‌ செல்வது மட்டும் பரிசுத்தமா ?

2. இந்தியாவின் இச்செயலை ஏன் இதற்கு முன்பு எங்கேயும் பெரியளவிற்கு குறிப்பிட்டு கண்டிக்கவில்லை ?

3. தமிழகத்தில் நடந்த பல்வேறு ஈழ ஆதரவு போராட்டங்களை நீங்களும் எழிலனும் சேர்ந்து கொண்டு அவை அனைத்தும் இந்தியாவிற்கு எதிராக திரும்பி விடாமல் தடுத்தது உண்மையா இல்லையா? இல்லை என்றால் அவற்றை எந்த திசையை நோக்கி வளர்த்துச்சென்றீர்கள்?

4. பரிசுத்த பட்டம் தரமுடியாத இந்தியாவின் சார்பாக ஏன் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு சென்றீர்கள்?

தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் இந்த நபரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஈழ மக்கள் இந்த நரியை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கிறோம்.

ஏஜென்டுகள், உளவாளிகள் ஆசீர்வதிக்கிறேன் என்று கூறிக்கொண்டு பாதிரி வடிவிலும் வருவார்கள். அவர்களை தேவனுடைய பரலோகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்குத் தான் உண்டு!

தொடர்புடைய இடுகைகள்:

ஐயோ…! இந்தியா நாசமாப் போ

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ஈழம் – கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ?

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!

திடீரென விழித்தெழுந்த தேவதூதர்கள், ஈழத்தின் மெளனவலி பற்றிப் பேசினரா..?

ஈழம் – கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ?

IndiaSriLanka_TamilNationalஈழத்தில் மிக வக்கிரமான ஒரு இனப்படுகொலையை இந்த‌ உலகமே வேடிக்கை பார்க்க பார்க்க நடத்தி முடித்திருக்கிறது சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாத அரசு. உலகில் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஐ.நா மன்றம், உலகின் ஒற்றை துருவ மேலாதிக்க ரவுடியாக திரியும் அமெரிக்கா, மற்றும் பல்வேறு போலி சோசலிச குடியரசுகள் வரை ஒட்டு மொத்த உலகின் அனுமதியுடன் தான் இந்த இனப்படுகொலை நடத்தப்பட்டது. இந்த இனப்படுகொலையை ந‌டத்திய போர் குற்றவாளிகளில் முதல் குற்றவாளி, நமது நாட்டில் ஒழுங்காக‌ ஒரு கக்கூசை கூட கட்டி பராமரிக்க வக்கற்ற இந்திய அரசு தான். பாசிச வெறியர்களின் இரத்தக்கள‌ரி முடிந்து இன்று ஐந்து மாதங்களாகிறது. இன்றோ மூன்று இலட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் முள்வேலிக்கப்பால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். முள்வேலி சிறைக்குள்ளும் வதை முகாம்களிலும் அடைத்து சித்தரவதைக்குள்ளாக்கப்படும் ஈழ மக்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் தமிழகத்திலும் உலக அளவிலும் பல்வேறு முற்போக்காளர்களும், ஜனநாயகவாதிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பிட்ட‌ சில நாடுகள் மட்டும் புலம் பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டங்களின் அழுத்தம் காரணமாக‌ ஈழத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய‌துடன், கண்துடைப்புக்கு ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளன.

தமிழகம் மற்றும் இந்தியாவை பொருத்தவரை ‘ஈழம்’ என்ற சொல் இது வரை தீண்டத்தகாததாகவும், ஈழ மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையை  பயங்கரவாதிகளின் மீதான அழித்தொழிப்பு என்று சித்தரித்ததன் மூலம் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட இரக்கமற்ற‌ வேட்டைக்கு நியாயம் கற்பித்த இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்பிக்களும், தேர்தலுக்கு முன் “காங்கிரஸை முறியடிப்போம்” என்று சீறி, பிறகு தேர்தல் வந்ததும் “காங்கிரசுடன் கூட்டணி தர்மம் காப்போம்” என்று கருணாநிதியின் கட்டளையை காத்த எம்பியும், ஈழத்திற்காக ‘அரைநாள் உண்ணாவிரதம்’ என்னும் கலியுக காவியத்தை கண்ணகி சிலை அருகில் உலகத்தமிழர்களுக்கே நடத்தி காட்டிய கருணாநிதியின் வாரிசுமான‌ கனிமொழியும் சேர்ந்து மொத்தம் பத்து எம்.பிக்கள் வதை முகாம்களில் உள்ள ஈழ மக்களை நேரில் கண்டுவர சமீபத்தில் சென்று வந்தார்கள்.

இவர்கள் ஈழ மக்களின் உரிமைகளை கோர சென்றார்களா அல்லது சுற்றுப்பயணம் சென்றார்களா என்ற கேள்வி எழும் அளவிற்கு வெறும் கண் துடைப்பிற்காகவும், பதவி நலனுக்காகவுமே செயல்படும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது நம் எல்லோருக்குமே நன்றாக‌ தெரியும். சிங்கள அரசும் இந்திய அரசும் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்த போது இந்த எம்.பிக்கள் யாரும் வாயை கூட திறக்கவில்லை, அல்லது தமது இரு கரங்களையும் பின் பக்கமாக கொண்டு சென்று பதவியை பத்திரமாக பிடித்துக்கொண்டு வார்த்தைகளை அளந்து அளந்து போட்டார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் திடீரென்று வேறு சில அமைப்புகள் ஈழ மக்களுக்கான‌ பிரச்சாரங்களையும், ஈழ துயரத்திற்கெதிரான கண்டனங்களையும் தெரிவிக்கின்றனர். போராட்டங்களையும் நடத்துகின்றனர். இவர்கள் ஈழ மக்களுக்காக கவலைப்படட்டும் கண்ணீர் விடட்டும் போராட்டம் நடத்தட்டும். ஆனால் ஈழத்தமிழர்களின் கவலைகளுக்கும் கண்ணீருக்கும் காரணமானவர்களுடனே கைகோர்த்துக்கொண்டு கவலை தெரிவிக்கும் கண்ணீர் விடும் இந்த புதிய‌ கனவான்கள் யார் என்பது தான் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
eelam_mukilan-300x300
நேற்றைய முன்தினம் (14-11-09) ‘நாம்’ என்னும் அமைப்பும், ‘போருக்கெதிரான பத்திரிக்கையாளர் அமைப்பு’ என்கிற‌ அமைப்பும் ‘நல்லேர்’ பதிப்பகத்துடன் இணைந்து ஈழமக்களின் துயரங்களை கவிதை வடிவில் தெரிவிக்கும் ‘ஈழம் மௌனத்தின் வலி’ என்னும் நூல் வெளியீடு நிகழ்ச்சியை சென்னை எழும்பூரில் நடத்தினார்கள்.

இவர்கள் யார் என்று அறிந்து கொள்வதற்காகவே கடுமையான மழையிலும் நனைந்து கொண்டே நாம் நிகழ்ச்சி நடக்கும் அரங்கை அடைந்தோம். அரங்கிற்குள் நுழைந்ததுமே நமக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக ஈழம் பற்றிய பொது கூட்டமோ, அரங்க கூட்டமோ எது என்றாலும் அதிக அள‌வில் இளைஞர்கள் இருப்பதை காணலாம். அதுவும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்களாகவே இருப்பார்கள், ஏதோ ஒரு வகையில் அவர்கள் முற்போக்கு வட்டத்துடன் தொடர்புடையவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த கூட்டத்தில் அதிகமாக பெண்கள் அதுவும் பணக்கார மற்றும்  மேல் நடுத்தர வர்க்க பெண்கள் குடும்பத்தோடு அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. எங்கு பார்த்தாலும் வித விதமான பெர்ஃப்யூம் வாசனைகள். ஆண்கள் தங்கள் மனைவி குழந்தைகள் சகிதமாக ஏதோ சினிமாவிற்கு வருவதை போல நல்ல மேக்கப்புடன் வந்திருந்தார்கள். அதுவும் அந்த பெருமழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர். நாம் ஏதோ பார்ப்பன திருமணத்திற்கு தான் வழி தவறி வந்து விட்டோமோ என்கிற அளவுக்கு நம்மை சுற்றியிருந்த சூழல் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேடையில் நடிகர் சிவக்குமார், ஜக்கி வாசுதேவ், நக்கீரன் கோபால், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் அமர்ந்திருக்க “ஈழம்- மௌனத்தின் வலி” என்ற வாசகத்துடன் நல்லேர் பதிப்பகத்தின் பெயருடனும் ‘நாம்’ அமைப்பின் பெயருடனும் அமைக்கப்பட்டிருந்த மேடை இது திருமண நிகழ்சியல்ல புத்தக வெளியீட்டு விழா தான் என்பதை உத்திரவாதப்படுத்தியது.
jakki
ஆனாலும் ஆச்சரியம்! இது போன்ற கூட்டத்திற்கு எப்போதும் வந்திராத பெண்கள் இத்தனை பேர் குடும்பத்துடன் எப்படி வந்திருக்கமுடியும்? ஒருவேளை இவ்வளவு நாளாக சமூகத்தின் மீது வராத அக்கறை இவர்களுக்கு திடீரென்று வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பெரும்பாலானோரின் கழுத்தில் ருத்திராட்ச மாலை, மற்ற அடையாளங்கள் கொண்டு பார்த்ததில் தான் தெரிந்தது அவர்கள் ஜக்கி வாசுதேவின் பக்தர்கள் என்று. இந்த கும்பல் ஈழத் துயரத்தை பகிர்ந்து கொள்வதற்காக‌ வரவில்லை. ஜக்கி வாயை திறப்பதை வேடிக்கை பார்க்கவே வந்திருந்தது. அதில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இது போன்ற ஆன்மீக அடிமைக்கூட்டம் தான்.

சரி ஜக்கி வாசுதேவை அழைத்து வெளியிடப்படும் இந்த நூலில் அப்படி என்னதான் உள்ளது?
இந்நூலின் உள்ளடக்கமே ஈழம் பற்றிய கவிதைகள் தான்.

அருந்ததிராய் போன்ற ஜனநாயகவாதிகளின் வார்த்தைகள், உணர்வுள்ள தமிழ் கவிஞர்களின் கவிதைகள், அத்துடன் பூக்களைக் கொண்டு மலத்தை மறைக்கும் விதமாக ரஜினி முதல் கமலஹாசன் வரையிலான தமிழ் சினிமா கூத்தாடிகளின் கவிதைகளும், கோடம்பாக்கத்தில் கூலிக்கு மாரடிக்கும் கக்கூசு பேரரசு வைரமுத்து வகையறாக்களின் கவிதைகளும், அத்துடன் அத்தனைக்கும் ஆசைப்படும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் கவிதையும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியின் வரவேற்புரை முடிந்ததும் புத்தகம் வெளியிடப்பட்டு பிரபலங்களின் உரை ஆரம்பித்தது.

முதலில் இயக்குனர் முருகதாஸ் பேசத் துவங்கினார். அவருடைய‌ அறிவு ஒரு முட்டாளுக்கு கூட இருக்க முடியாது. இவரெல்லாம் எப்படி சினிமா டைரெக்ட்டர் ஆகித்தொலைத்தாரோ! அவர் பேசினார், இந்த புத்தகத்திலிருக்கும் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை! (புத்தகம் முழுவதும் இருப்பது சிதைக்கப்பட்ட தமிழ் மக்களின் கொடூரமான புகைப்படங்கள் மட்டும் தான்) நம்முடைய பார்வைக்கு இதெல்லாம் வரவே இல்லையே என்று நினைக்கும்போது அது யாருடைய‌ தப்பு? ஏன் இந்த‌ தகவல் தொழில் நுட்ப யுக‌த்திலும் இவ்வளவு மோச‌மாக இருக்கிறோம்? நிலவுக்கு போய் விட்டோம் என்கிறோம். ஆனால் இந்த படங்கள் எல்லாம் நமக்கு தெரியவே இல்லையே? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த கொடூரம் எதனால் நடந்தது? ஏன் ஊடகங்கள் இச்செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை? என்று பாமரத்தனமாக கூட்டத்திடமே கேள்வி கேட்டு விட்டு அமர்ந்தார். ஒருவேளை பேச வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் யாராவது தனக்கு பதில் சொல்வார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் ஒரு பொது மேடையில் இந்த ஏ.ஆர் முருகதாஸ் இப்படி பேசினார்.
child

அடுத்து பேசிய நக்கீரன் கோபால் வழக்கம் போல‌ அந்த மேடையை திமுக பிரச்சார மேடையாக மாற்றினார். இவரின் ஈழம் பற்றிய கருத்துகள் செய்திகள் அனைத்தும் கருணாநிதியின் எல்லைக்குட்பட்டதே என்பதை மறுபடியும் நமக்கு நிரூபித்தார். ‘ஈழத்தில் மக்கள் சாவதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை என்றால் இறப்பவர்கள்’  ‘பா’ என்று ஆரம்பித்து வார்த்தையெடுத்தார் ஏனோ தெரியவில்லை அத்துடன் அவ்வார்த்தையை விழுங்கி விட்டு ‘இட்லிகாரன் அல்ல, இந்தி காரன் அல்ல, சீக்கியன் அல்ல’ என்று தடுமாறினார். அங்கே இறப்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் அல்ல என்பதை தான் அவர் சொல்ல வாய் எடுத்தார், ஆனால் ஜக்கி கோபித்துக்கொள்ள மாட்டாரா? இந்தியா கோபித்துக்கொள்ளாதா? எனவே விழுங்கிவிட்டார். பிறகு ‘இறப்பவர்கள் தலையிலோ மார்பிலோ பிறக்காதவர்கள். அவர்கள் காலுக்கு கீழே பிறந்தவர்கள்’ என்று சுற்றி வளைத்து  ‘சூத்திரர்’ என்கிற வார்த்தையை சொல்வதற்கும் கூட‌ படாதபாடுபட்டார் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்ற‌ம் குற்றமே’ என்கிற லேபிளுடன் பத்திரிகை நடத்தும் ‘நக்கீரன்’ கோபால். பார்ப்பான் என்பதை நாலு பேருக்கு முன்னால் பயமின்றி சொல்லக்கூட திராணியில்லை. ஆனால் மீசை முறுக்குக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

புலிகள் மீதான தடை முதல் ஈழம் வாங்கி தருவதாக சொன்னது வரை ஜெயலலிதாவை பற்றி குற்றம் கூறிய கோபால், கருணாநிதியின் துரோகம் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஈழத்தாய் என்று ஜெயலலிதாவிடம் சரணடைந்தவர்களை சாடியவர், ஏனோ கருணாநிதியின் காலை நக்கி பிழைப்பவர்களை பற்றி பேசவேயில்லை. ஜெயலலிதாவின் நாடகத்தை எடுத்துரைக்கும் கோபாலுக்கு கோபாலபுர குடும்ப நாடகத்தை எடுத்துரைக்க தெரியவில்லையா? அல்லது விருப்பமில்லையா? கருணாநிதியின் கயமைத்தனங்களை மட்டும் மறைத்து விட்டு ஜெயலலிதாவின் குற்றங்களையே சுட்டிக் காட்டினார். சும்மா சும்மா கருணாநிதியை மட்டுமே குறை சொல்லிக்கொண்டிருக்க கூடாது. இன்று இந்த அளவிற்காவது நாம் ஈழத்தை பற்றி தமிழகத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்காக‌ க‌லைஞ‌ருக்கு நாம் நன்றி தான் செலுத்த வேண்டும் என்றார்!

யாருக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டும்? ஆயுதத்தின் வாயில் ஈழ மக்கள் இறந்துகொண்டிருக்கும் போது பதவிக்காக எதுவும் பேசாமல் அமைதி காத்த கருணாநிதியின் கயமைத்தனத்திற்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டுமா? ஈழமக்களுக்காக தமிழத்தில் போராட்டங்களில் mukaகுதித்த மாணவர்களின் மண்டையை உடைத்த‌ கருணாநிதிக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டுமா? கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்க சொல்லி கருணாநிதியின் மீதான விசுவாசத்தையும் பத்திரிக்கை துறையில் தனது பிழைப்புவாதத்தையும் வாந்தி எடுத்தார் கோபால். தமிழர்களை கொல்ல மேலாதிக்க‌ இந்திய அரசு போருக்கு உதவிய‌ போது கருணாநிதியும், தமிழக எம்.பிக்களும் யார் மயிரை புடிங்கிக்கொண்டிருந்தார்கள்? இதை கருங்காலி கருணாநிதியிடம் கேட்கக்கூடாது என்றால் அதற்கு இந்த நக்கீரன் கோபால் தான் பதில் சொல்ல வேண்டும்? இந்திய அரசுக்கு கூஜா தூக்கிய துரோகி கருணாநிதியை காப்பாற்றுவது தான் மேடைக்கு மேடை இந்த கோபாலுக்கு வேலை. அந்த வேலையை இந்த மேடையிலும் கச்சிதமாக செய்து விட்டு அமர்ந்து கொண்டார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் எந்த அரசியலும் இன்றி மனித நேய‌ அடிப்படையில் அவருடைய கருத்துக்களை தெரிவித்தார். ஈழம் என்றதும் தமிழகத்தில் இரு போக்குகள் நிலவுவதாக குறிப்பிட்டார். ஒன்று அதிகமாக கூச்சலிடுகிறோம். மற்றொன்று மௌனமாகிறோம். மௌனதிற்க்கு பின்னால் எத்தனை காரணங்களோ, நலன்களோ இருந்தாலும் நிச்சயமாக நியாயம் இல்லை. போர் என்பது குற்றமென்றால் மௌனம் என்பது பாவம். இப்போதாவது உலகின் அதிகாரத்திலிருக்கும் தலைவர்களும் நாடுகளும், மனிதம் சாவதை வேடிக்கை பார்க்காமல் ஈழமக்களை காக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னுரையை முடித்துக்கொண்டார்.

நடிகர் சிவக்குமார், வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள சில கவிதைகளை மட்டும் வாசித்தார். மணிக்கணக்காக‌ கம்பராமாயணம் கதாகாலட்சேபம்  வாயார பேசும் இந்த பேச்சாளர் ரெண்டு கவிதை வாசித்ததை தவிர வேறெதுவும் பேசவில்லை. ஒருவேளை துயரம் அதிகமாகி தொண்டை அடைத்துக்கொண்டிருக்கும் போலிருக்கு.

கடைசியாக பேசிய சிறப்பு பேச்சாளர் ஜக்கி வாசுதேவ் ஈழ மக்களின் துயரம் பற்றி பேசினார் என்று சொல்வதை விட மயக்க நிலைக்குள் தள்ளும் சொற்பொழிவாற்றினார் என்றே சொல்லவேண்டும். ஆம், அப்படி தான் அவரது உரை இருந்தது. ஜக்கி பேச ஆரம்பித்தவுடன் இருகரம் கூப்பிய பக்தர்களில் பலர் அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை கையை கீழே இறக்கவேயில்லை. அவர்களை பொருத்த‌வரை அது அரங்கமல்ல கோவில். ஜக்கி பிராடு அல்ல சாமி. எனவே பரவச நிலைக்கு போனவர்கள் அப்படியே உறைந்து போனார்கள். கூட்டம் முடிந்த பிறகு கடைசியாக அவர்களிடம் போய் ‘ஈழம்’ என்று சொல்லியிருந்தால் என்ன அது என்று தான் கேட்டிருப்பார்கள். அந்தளவிற்கு அவர்கள் அனைவரும் ஜக்கி போதையிலிருந்தார்கள். இதுவரை யாரும் ஈழ விடயத்தில் சொல்லத்தவறிய(!) மனிதாபிமானத்தை பற்றித்தான் பேசினார் ஜக்கி. ஆனால் வழக்கமான பாணியில் ஆனந்த நிலையில் லயித்து போகாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டே பேசினார். பேச்சின் நடுவில் ‘அங்க மனித்தர்கள் சாக்கிறார்கள் என்னா அங்க மனித்தன் சாகவில்லை,  மனித்தமே சாக்கிறது’  என்று சொன்னவுடன் ஒரு நொடி அவருடைய பக்தர்கள் கொட்டிய ‘உச்’ ‘உச்’ அதை பஞ்ச் டைலாக்காக மாற்றியது.
art.lanka.afp.gi
உலகில் போரே வேண்டாம் என்று பேசிய ஜக்கி முதல் உலகபோரில் ஐந்து கோடி மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகபோரில் ஏழு கோடி மக்கள் இறந்தனர் என்று போகிற போக்கில் தனது கம்யூனிச எதிர்ப்பையும் விசம் போல உலகப்போர்களுடன் கலந்து விட்டு கடந்து சென்றார். ரஷ்ய புரட்சியின் போது இரண்டரை கோடி மக்கள் இறந்து போனார்கள் என்று அதையும் கொலை பட்டியலில் சேர்த்துக்கொண்டார். மக்கள் இகலோக வாழ்க்கையை விட‌ உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்காக போதிக்கும் இந்த நவீன போலிசாமியாருக்கு உலக போரில் இறந்த மக்களின் புள்ளிவிவரம் கூட தெரியவில்லை. அந்தளவிற்கு மாங்காயாக இருக்கிறது! ஆனால் அவரை சுற்றியிருந்த ஆன்மீக‌ அடிமைக்கூட்டமோ பரவச நிலையில் வாயடைத்து போய் விட்டது. இந்த ஆளிடம் மாட்டிக்கொண்டிருக்கும் மக்களை இர‌ண்டு வகையிலும் (போலி ஆன்மீகத்திலிருந்தும் இயல்பான மன‌நிலைக்கும் திரும்ப‌) மருத்துவர் ருத்ரன் போன்றவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

மேலும் அவர் அகிம்சை பற்றி போதிக்கும் போது “இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இரண்டாம் உலகபோரும் மூண்டது. முதல் உலகப்போரின் போது போரில் ஈடுபட்டிருந்த‌ இங்கிலாந்து பலமிழக்கும் நேரத்தில் நாம் இந்திய சுதந்திரத்திற்கான‌ போராட்டத்தை துரிதப்படுத்தலாம் என்ற வாய்ப்பு கிடைத்த போது மகாத்மா என்ன கூறினார் தெரியுமா? எதிரி பலவீனமான நிலையில் இருக்கும் போது நாம் தாக்கக் கூடாது. அது மனித நேயத்திற்கு எதிரானது. எனவே இரண்டாம் உலக போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாகதான் நாம் ராணுவம் அனுப்பவேண்டும் என்று காந்தி சொன்னார்” என்று காந்தி செய்த துரோகத்தை மனிதநேயத்தின் பெயரில் நியாயப்படுத்தினார். இவ்விடயத்தை கூறிய ஜக்கிக்கு நாம் நன்றி கூறியாக வேண்டும். ஆம் காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் செய்த துரோகத்தின் ஒரு பகுதியை ஒப்புக்கொண்டதற்கு நாம் நன்றி கூறியே ஆகவேண்டும்.

அகிம்சை தத்துவத்தின் அடிப்படையில், மனித நேயத்தின் அடிப்படையில் எதிரியை கூட நாம் அடிக்க கூடாதென்றால் எதிரிக்கு எதிரியான இன்னொருவனை அடிக்க ஆள் அனுப்பது மட்டும் அகிம்சைக்கு சரியா? எங்கேயோ இடிக்கிறதே! அகிம்சைக்கும் ஒத்து வராத கருத்தாக இருக்கிறதே! என்று யோசிக்கும் சாதாரண மக்களுக்கும் ‘அதன் பெயர் அகிம்சை இல்லை. இந்திய மக்களுக்கிழைத்த துரோகம்’ என்று புரியும். ஆனால் இந்த முட்டாள் ஜக்கி வாசுதேவுக்கு ஏன் புரியவில்லை? அவருக்கு புரியாமல் இல்லை, நம‌க்கு எதுவும் புரியாமல் இருக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த ஜட்டி இருக்கிறது சாரி ஜக்கி.

மேலும் மனித நேயத்தை பற்றி பேசும் போது எல்லா உயிர்களும் போராடுகின்றன. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. அடிக்கும் போது  திருப்பி அடிக்கக் கூடாது. உரிமைகள் மறுக்கப்படும் போது வன்மையாக போராடக்கூடாது. மனித‌ நேயத்தை வெறும் சொல்லாக அல்ல, அமைப்பாக கலாச்சாரமாக மக்கள் மனதில் ஏற்க வேண்டும் என்றும் போதித்தார். யாருக்கு தான் முரண்பாடு இல்லை என்று சொன்னவர், குடுபத்திற்குள் இருக்கும் கணவன் மனைவி முரண்பாட்டையும், இனவெறி முரண்பாட்டையும் ஒப்பிட்டு புதிய முரண்பாட்டு கொள்கையை விளக்கி கூறினார்.
camp
நம் அனைவருக்கும் மற்றவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் தான் அவற்றை ஒடுக்குமுறையாக வன்முறையாக மாற்றுகிறோம் என்று சொன்னதன் மூலம் உலக நாடுகளில் மக்களின் உரிமைகள் பரிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் போது அதை எதிர்த்து போராடிய அம்மக்களையும் அவர்களின் உரிமைக்கான போராட்டங்களையும் ஜக்கி கொச்சைபடுத்தினார்.

ஈழத்தில் நடப்பதற்கு பெயர் வெறும் முரண்பாடு இல்லையடா முட்டாள் ஜக்கியே! அதற்கு பெயர் இனப்படுகொலை என்று எல்லாம் தெரிந்த உனக்குத் தெரியாதா? சிங்கள் இனவெறி அரசின் வக்கிரங்கள் இந்த மூதேவியின் ஞான கண்களுக்கு மட்டும் தெரியவில்லையே ஏன்? அல்லது ஆனந்த பரவசநிலையில் லயித்த கண்கள் அதை பார்க்கத் தவறிவிட்டதா? பார்க்கவில்லையானாலும், காதால் கூட செஞ்சோலையிலிருந்து வதை முகாம்கள் வரை அரற்றிய பிஞ்சுகளின் குரலும் சிங்கள இலங்கை அரசின் இனவெறி கொக்கரிப்பும் கூட இந்த செவிட்டு ஜக்கியின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்காக மக்கள் போராடுவது வெறித்தனமா?
வன்முறை ஏவப்படும் போது அதற்கெதிராக மக்கள் போராடுவதும் வன்முறையா? மனிதம் அழியும் போது அதற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காமல் போராடும் மனிதன் கூட மனிதாபிமானத்திற்கு எதிரானவனா?

இதை தான் அன்றைக்கு கபட வேடதாரி காந்தி சொன்னார். இன்று இந்த‌ ஜக்கி சொல்கிறது.

அன்று மக்களின் விடுதலை போராட்டங்களை எல்லை மீறாமல் மழுங்கடித்து மக்களுக்கு அகிம்சை என்று போதித்து ஆங்கிலேயனை பாதுகாத்து, சுரண்டுபவன் மேலும் பல ஆண்டுகள் தங்கி சுரண்ட வாய்ப்பு வழங்கிய அகிம்சா துரோகி காந்தி!  அதே அகிம்சை தத்துவத்தை கூறி அதே போன்று அநீதிக்கெதிரான மக்களின் போராட்டங்களை கொச்சைபடுத்தும் இன்றைய அகிம்சா துரோகி ஜக்கி வாசுதேவ்!

ஆளும் வர்க்கத்திற்கு வேண்டிய அமைதியை நிலை நாட்ட வேண்டிய அடியாள் வேலையை தான் இது போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் செய்து வருகிறார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டாலும் அதை எதிர்த்து சிறு அளவில் கூட வன்முறை இருக்கக் கூடாது. வன்முறை, ஒன்று கூடுவது என்பதை கேட்டாலே ஆளும் கும்பல் எப்படி நடுங்குகிறதோ அதே போல தான் இந்த போலி சாமியாரும் இறுதியில் பேசினார். அப்போது தான் இந்த‌ ஜக்கி வாசுதேவின் நோக்கம் என்ன என்பது நன்றாக விளங்கியது.

 

che
 

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே!” என்கிற‌ சே குவேராவின் மேற்கோளை குறிப்பிட்ட ஜக்கி, இது மிகவும் மோசமான வன்முறை கருத்து. சேகுவேராவின் கருத்துக்கு எதிராக இருப்பது தான் நல்லது, எனவே சேகுவேராவின் இந்த கருத்துக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் அனைவரும் நம் சகோதரர்களே என்று கூறினார்.

கடைசியாக இந்த போலி சாமியார் ஈழப்பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு சொன்னார்? மக்கள் ஒவ்வொருவரும் மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று கூறியதை தவிர வேறு ஒன்றையும் சொல்லவில்லை. ஈழக்கூட்டம் ஆன்மீக கூட்டமாக்கப்பட்டதுடன், உண்மையான ஈழ ஆதரவாளர்களிடம் ஈழமக்களின் துயரத்தை விட இக்கூட்ட்த்திற்க்கு வந்த துயரம் மேலோங்கியிருந்ததை காண முடிந்தது.

ஜக்கி வாசுதேவ் என்கிற இந்த எல்லாம் துறந்த (பன்னாடை) பரதேசி ஈழம் தொடர்பாக இதற்கு முன்பு நடந்த அத்தனை கூட்டங்களையும் இழிவு படுத்திவிட்டுச்சென்றார். வதை முகாம்களில் வாடும் மக்களையும் இதை விட யாரும் இழிவு படுத்த முடியாது.

கடைசியாக நன்றியுரை கூறிய மருத்துவர் எழிலன்  ‘நன்றி, எதற்கு சொல்ல வேண்டும் நன்றி’ என்று ஏதோ வித்தியாசமாக சொல்லப்போவதாக நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார். ஆனால் ‘சாமி’ மேடையை விட்டு இறங்கி விட்டதால் அனைவரின் கண்களும் ஜக்கியின் மீதே இருந்ததால் இவரின் இந்த வித்தியாசமான உரையை பாவம் யாரும் கேட்க கூட முடியவில்லை. மக்களின் விடுதலைப் போராட்டங்கள் அனைத்தையும் கேவலப்படுத்தி விட்டு சர்வதாராணமாக ஒரு போலி சாமியார் பரதேசி மேடையை விட்டு கீழே இறங்கிக்கொண்டிருக்கும் அந்த‌ ஜக்கியை கண்டுகொள்ளாமல் பல்லை இளித்துக்கொண்டு நன்றியுரை ஆற்றிக்கொண்டிருந்தார் எழிலன்.

உலக மக்களின் போராட்டங்களையே கொச்சைபடுத்தியதுடன் ஈழப்போராட்டத்தையும் கொச்சை படுத்திய ஜக்கியை பற்றி அரங்கில் யாருமே கண்டுகொள்ளாததற்கு என்ன காரணம்?

காரணங்கள் காண்பதற்கு முன் நிகழ்ச்சி ஏற்பாட்டின் பிண்ணனியை பார்ப்போம். பிரபலங்களின் கவிதைகளை தொகுத்து பிரபலங்களை வைத்தே நூலை வெளியிட்ட‌ இந்த‌ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யாரெனில், கனிமொழி, கார்த்திக் சிதம்பரம் போன்ற அரசியல் பிரபலங்களின் நட்பு வட்டாரத்தில் உள்ள பாதிரி ஜகத் கஸ்பார்.

இன்றைய ஈழ உணர்வுள்ளவர்களிடம், குறிப்பாக ஈழ உணர்வுள்ள சில IT இளைஞ‌ர்களிடையே மிகவும் பிரபலமான இந்த ஜெகத் கஸ்பாரும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பணிபுரிந்து தற்போது நடிகர் நடிகைகளுக்கு ‘பல்வேறு’ ஏற்பாடுகளையும் செய்து வருபவரும் ஞானவேல் என்பவரும் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். இந்த கவிதை நூலில் உள்ள புகைப்படங்கள் இவரின் தேர்வுகளே.

kasperபாதிரியராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று பல‌ கோடிகளுக்கு சொந்தக்காரரான ஜகத் கஸ்பார் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். உலக நாடுகளை ஊடகம் மூலம் உளவு பார்க்கும் நிறுவனமாகத்தான் வெரித்தாஸ் வானொலி நிலையம் துவங்கப்பட்டது. உளவு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் தான் ஈழத்தில் நடேசனுடன் தனக்கு நேரடி தொடர்புள்ளதாக நக்கீரனில் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி, கார்த்திக் சிதம்பரம் போன்றோரின் நட்புடன் உள்ள இவர் ஆளும் வர்க்கத்தெற்கெதிரான, அரசுக்கெதிரான மக்களின் போராட்டங்களை மழுங்கடிப்பவர். வெரித்தாஸ் வானொலியின் உளவு நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் நடேசனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று இவரே குறிப்பிட்டதில் இவர் உளவாளி என்பதை இவரே நமக்கு அறிவிக்கிறார்.

இந்த கவிதை தொகுப்பு நூலில் எமது அமைப்பின் கவிஞர் தோழர் துரை சண்முகம் அவர்களின் கவிதையும் இடம் பெற்றுள்ளது. பத்திரிக்கையாளர் அமைப்பு என்கிற பொதுவான பெயருடன் எம்மிடம் அறிமுகமான இவர்கள் ‘நாம்’ அமைப்பை பற்றியோ, அதற்கு பின்னால் இருப்பவர்கள் பற்றியோ, உளவு ஏஜெண்ட் ஜெகத் கஸ்பார் பற்றியோ எதையும் கூறாமல் நம்மையும் இதில் பங்கேற்க வைக்கும் விதமாக, “நாங்கள் பொதுவான பத்திரிகையாளர்கள். நாங்கள் ஒரு கவிதை நூலை வெளியிடுகிறோம் அதற்கு உங்களின் பங்களிப்பும் வேண்டும்” என்று கூறி தோழரிடம் ஒரு படத்தையும் கொடுத்து அதற்கு கவிதையையும் எழுதி வாங்கிக் கொண்டு பதிப்பித்து விட்டார்கள். எவ்வளவு அயோக்கியத்தனம் பாருங்கள்! ஒரு புரட்சிகர அமைப்பையே ஏமாற்றி இவர்களுடன் நம்மையும் நிற்க வைத்து படமெடுத்துக்கொள்ள என்ன ஒரு கிரிமினல் புத்தி பாருங்கள். உளவாளிகள் தான் இது போன்ற வேலைகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். இப்படி திருட்டுத்தனமாக எம்மையும் இந்த ஏஜெண்ட் கும்பல் தம்மோடு சேர்த்துக்கொண்டது மட்டுமின்றி, படைப்பாளியின் அனுமதியின்றி கவிதையிலும் கை வைத்திருக்கிறார்கள். கவிதையிலுள்ள முக்கியமான இரண்டு அரசியல் சொற்களை கத்தரி போட்டு வெட்டி எறிந்துவிட்டார்கள். இதை எடிட் செய்தவன் எவன்? ஜெகத் கஸ்பாரா, ஞானவேலா? உங்களுடைய நோக்கம் என்ன? எதற்காக அந்த வார்த்தைகளை வெட்டினீர்கள்? இந்த உளவாளிகள் கவிதையிலிருந்து நீக்கிய வார்த்தைகள் இரண்டும் போரில் இந்திய அரசை அடையாளம் காட்டும் வரிகளாகும்.

“தேர்தலுக்காக இரத்தத்தைத் திருடிய உங்களிடம்
ஒப்படைக்க முடியாது எங்கள் கண்ணீரை.
இந்தியக் கொலைக்கரத்தை முறிக்காமல்
எம் பிள்ளை துயிலாது”

என்று தோழர் துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் ‘தேர்தலுக்காக’ என்பதையும் ‘இந்தியக் கொலைக்கரத்தை’ என்பதையும் வெட்டி நீக்கி விட்டே பதிப்பித்திருக்கிறார்கள் இந்த யோக்கியவான்கள்.

மக்களின் இந்த துயரநிலைக்கு காரணம் யார்? என்ன பின்னணி? என்பதை பற்றி பேசாமல் நடத்தப்படும் கூட்டங்களும் போரட்டங்களும் நேர்மையானதாக இருக்க முடியாது. இதன் பின்னால் இருக்கும் ஏகாதிபத்திய நலன்களை பற்றியும், இந்திய மேலாதிக்க நலன்களை பற்றியும் அம்பலப்படுத்தாமல் நடத்தப்படும் போரட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் பின்னால் ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஒளிந்திருக்கும். இவர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஜக்கியின் இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு விமர்சன கருத்துக்களை பதிக்காத ஜகத்கஸ்பார் பற்றியும், மருத்துவர் எழிலன் என்பவர் தமிழக திட்டக் குழுவின் துணை தலைவர் மு. நாகநாதனின் மகன் என்பதை பற்றியும் உற்றுநோக்கினால் இந்த கூட்டம் யாரால் நடத்தப்பட்ட கூட்டம் யாருடைய நலனுக்காக‌ கூட்டப்பட்ட கூட்டம் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். இந்த கூட்டம் நடத்திய அமைப்புகளின் பின்னே ஏகாதிபத்திய நலன்களும், ஆளும் வர்க்க இந்திய அரசின் நலன்களும், கருணாநிதியின் குடும்ப நன்களும் இருப்பதையே தெள்ளத் தெளிவாய் காட்டுகின்றன.

தமிழகத்தில் நடக்கும் பல்வேறு ஈழ ஆதரவு போராட்டங்கள், அக்கூட்டங்களில் திரளும் இளைஞர்கள் அனைவரும்  இந்திய அரசுக்கு எதிராக திரும்பி விடாதபடி அவர்களை வேறு பக்கத்திற்கு மடை மாற்றி விடும் மகத்தான ப‌ணியை தான் இந்த ஜெகத் கஸ்பார் என்கிற உளவாளி பாதிரி செய்துகொண்டிருக்கிறார். இவருடைய‌ சகாக்களாக அல்லது சக உதவியாளர்களாக ஞானவேல், எழிலன் இன்னும் வெளியில் வராத பெயர் தெரியாத‌ பலரும் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இவர் துவக்கத்தில் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியவர். வெரித்தாஸ் வானொலி சி.ஐ.ஏ வால் இயக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தின் நலனுக்காக செயல்பட்ட வானொலி. தேசிய இயக்கங்களின் போராட்டங்களுக்குள் நுழைந்து கொண்டு அதைக் கைப்பற்றி எதிர்ப்பை நிறுவனமயமாக்கும் வேலையை வெரித்தாஸும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இது போன்ற பல்வேறு நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஈராக் மக்களின் போராட்டங்களை நீர்த்து போக வைக்க அம்மக்களின் போராட்டங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா சேவை அமைப்புகள் போன்ற‌ பல்வேறு என்.ஜி.ஒ நிறுவன‌ங்களையும் அங்கு இற‌க்கி விட்டுள்ளது. அது போன்ற ஒரு நிறுவனம் தான் வெரித்தாஸ். அதில் பணி புரிந்தவர் தான் இந்த கஸ்பார்.

565737-veritas_copy2f_super

அப்போது அவருக்கு பல்வேறு புரோஜக்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.  தனது திட்டத்தை சிரத்தையாக ஏற்றுச்செய்த‌ இவர் எதற்காக இந்தியாவிற்கு வந்தார் என்பதே சந்தேகத்திற்குறிய கேள்வி. அதன் தொடர்ச்சியாக இவர் நக்கீரனில் எழுதி வருவதும், இளைஞர்களை அரவணைப்பதும் நமக்கு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. அதற்கேற்பவே இவர் மே17 இயக்கம் என்கிற இயக்கத்தை நடத்துகிற திருக்குமரன் என்பவரை பற்றி நக்கீரனில் பாராட்டி எழுதியுள்ளார்.
இந்திய அரசு பற்றி இவர் சாடி எழுதுவதே இல்லை. பேசும் இடங்களிலும் இவர் இந்தியா பற்றி பேசுவதில்லை. தற்போது வெளியிட்டுள்ள நூலும் இதற்கு நல்ல சான்று. அதில் தேடிப்பார்த்துவிட்டோம். இந்தியா என்கிற ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படியான ஈழமக்களை கொன்றொழித்த‌ போரில் போர் குற்றவாளியான‌ இந்திய அரசின் பங்கை இந்த ஜெகத் கஸ்பார் மறைக்க முயலுவதன் நோக்கம் என்ன?

அவை விரைவில் வெளிவரும். முழுமையாக தமிழ் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்படும். அப்போது ஜெகத் கஸ்பார்களும், ஞானவேல்களும், எழிலன்களும் தமிழ் மக்களிடம் விளக்கம் கூற வேண்டியிருக்கும்.

தமிழ் உணர்வுள்ள ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களே, இவர்களைப் போன்ற சந்தேகத்திற்குரிய நபர்களிடம் நெருங்காதீர்கள். ஆனால் இவர்களை உற்று கவனியுங்கள். இவர்கள் என்ன பேசுகிறார்கள் யாருக்காக பேசுகிறார்கள் என்பதை கவனித்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது இவர்கள் மீது விமர்சனம் வந்து விட்டது என்பதால் இவர்கள் அடுத்த சில நக்கீரன் இதழ்களில் இந்தியாவிற்கு எதிராக கூட எழுதலாம். சில கூட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக கூட பேசலாம். அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி விடாதீர்கள். நம்பகத்தன்மை ஏற்படுத்த‌ இடைக்காலமாக‌ அப்படி பேச இது போன்ற ஆட்களை இந்திய அரசே அனுமதிக்கும். நம்பாதீர்கள்!  எச்சரிக்கை!!

ஈழம்  – மௌனத்தின் வலி” – இது இந்திய மேலாதிக்கத்திற்கு ஆதரவான உளவாளிகளின் கள்ளமௌனத்தை மறைக்கும் நிழற்படங்களின் தொகுப்பு.

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ஐயோ…! இந்தியா நாசமாப் போக…

ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!

சே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்!

திடீரென விழித்தெழுந்த தேவதூதர்கள், ஈழத்தின் மெளனவலி பற்றிப் பேசினரா..?